Startup கதைகளும் பாடங்களும்

தரநிலை

ஸ்டார்ட்அப் கதைகளும் பாடங்களும் . தொழில்முனைவோருக்கான புதிய தொடர். இந்த தொடரின் முடிவில் நீங்களும் தொழில் முனைவோராக மாறத் துடித்தால் அது தான் இந்த தொடரின் வெற்றி…

Source: Startup கதைகளும் பாடங்களும்

Advertisements

Startup கதைகளும் பாடங்களும்

தரநிலை
Startup கதைகளும் பாடங்களும்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்டார்ட்அப் என்ற சொல் வண்டி கிளம்ப மக்கர் பண்ணினால் “ஸ்டார்ட்அப் ப்ராப்ளம்பா கொஞ்சம் என்னவென்று பாருங்க” என்று குறிப்பிடும் சொல்லாக தான் இருக்கும்.

இன்று அது தான் 21ஆம் நூற்றாண்டின் புதுயுக சொல்லாக இருக்கிறது. மத்திய அரசும் மாநில அரசுகளும் வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை சரிகட்ட இந்த சொல்லை தான் தீர்வாக முன்வைக்கிறார்கள். உங்களிடம் ஒரு சிறப்பான தொழில் ஐடியா இருக்கிறது. அதை செயல்படுத்த ஒரு நிறுவனத்தை தொடங்குகிறீர்கள். அந்த புது நிறுவனம் தான் ஸ்டார்ட்அப்.

முன்பெல்லாம் ஒருவரின் தொழில் யோசனை நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் ஒரு பெரிய முதலீடு வேண்டும். இடம், ஆள் பலம் என்று பல அடிப்படை விஷயங்கள் வேண்டும். ஆனால் இன்று குறைந்த விலையில் கணினியும், இணையமும் வந்த பிறகு அறிவை மட்டுமே முதலீடாக கொண்டு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள கம்பெனியையும்  ஆரம்பித்துவிடலாம். எளிய மற்றும் கவர்ச்சிகரமான உதாரணம் Facebook Mark Zuckerberg. இவரை பற்றி கிளைமாக்ஸ்ஸில் விரிவாக பார்ப்போம். அதற்கு முன்பு நம்ம ஊர் ஸ்டார்ட்அப் ஜாம்பவான்கள் இருவரை பற்றி பார்த்துவிடலாம்.

என்னை ஈர்த்த முதல் ஸ்டார்ட்அப் ஜாம்பவான் சபீர் பாட்டியா. என்னை மட்டுமல்ல உலகையே ஈர்த்த, உலகின் பெரிய பணக்காரரான பில்கேட்ஸை ஈர்த்தவர் அவர். அவர் செய்ததெல்லாம் ஈமெயில் சேவையை முற்றிலும் இலவசமாக உலகிற்கு திறந்துவிட்டது தான். அதுதான் hotmail. அதன்பின்பு பிறந்தவை தான் yahoomail, gmail எல்லாம்.  இன்றைய டீன்-ஏஜ் மக்கள் பிறப்பதற்கு முன்பே இது உருவாகி 2000 கோடிகளுக்கு அன்றே கைமாறியும் விட்டது

sabeer-bhatia

சபீர் பாட்டியா சண்டிகரில் பிறந்தவர் என்றாலும் வளர்ந்ததெல்லாம் பெங்களூரில் தான். மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்று Califorinia institute of technology இல் B.S படித்தார். அது முடித்தபிறகு புகழ்பெற்ற Standford பல்கலைகழகத்தில் MS Electrical Engineering படித்து முடிக்கிறார். முடித்தவுடன் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் Hardware Engineer ஆக வேலைக்கு சேர்கிறார்.
ஒருநாள் தன்னுடன் பணிபுரிந்த நண்பருக்கு மெயில் அனுப்ப முயற்சிக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் Firewall அதை தடுத்துவிடுகிறது. தடைக்கல் படிக்கல்லாக தெரிய அன்று தான் அவருக்கு Hotmail பிறக்க ஐடியா தோன்றுகிறது. தன் நண்பர் ஜாக் ஸ்மித்துடன் இணைந்து பொதுமக்கள் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஹாட்மெயில்லை உருவாக்குகிறார்.

இதில் என்ன புதுமை? அதற்கு முன்புவரை ஈமெயில் ஒரு பெருமித அடையாளமாக குறைவான நபர்களிடம் மட்டுமே புழங்கியது. அன்றைய காலகட்டத்தில் ஒரு ஈமெயில் ஐடியை பெற நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக வேலைபார்க்க வேண்டும். அல்லது ஈமெயில் ஐடியை விலை கொடுத்து வாங்கவேண்டும்.

இவர்களை போல சில நிறுவனங்கள் இலவச ஈமெயில் ஐடி கொடுத்து வந்தன. ஆனால் அவை பயன்பாட்டிற்கு எளிதாகவோ, முழுமையாக இலவசமாகவோ இல்லை. இது தான் ஒரு தொழில்முனைவோர் கண்டறிய வேண்டிய வெற்றிக்கான இடைவெளி. இந்த கேப்பில் புகுந்து வெளியில் வந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.

இணையம் வணிக பயன்பாட்டில் இருந்து பொதுமக்களுக்கு நகர்ந்த காலகட்டம் அது. அதை சரியாக பயன்படுத்தி ஹாட்மெயில் பலகோடி பேரை சென்று சேர்ந்தது. இன்டர்நெட் கபே என்ற பெயரில் பல ப்ரௌஸ்சிங் சென்டர்கள் உலகமெங்கும் பிறந்தது. ஒரு கடிதம் ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சென்று சேர பல நாட்கள் எடுத்துக்கொண்ட காலம். வாழ்த்து கடிதம் அனுப்பினால் அந்த பண்டிகை முடிந்தபிறகே கிடைக்கும். செல்போன்கள் சொல்லவே வேண்டாம். ரெம்பவும் காஸ்ட்லி அயிட்டம். இன்கமிங்க்கு கூட ஒரு நிமிடத்திற்கு 10ரூபாய். அப்போது 1996ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனுப்ப பலரும் ஹாட்மெயிலில் கணக்கை தொடங்கினார்கள். உறவினர்களை நண்பர்களை தொடங்க வைத்தார்கள்.

அப்போது Windows-95 வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. பில்கேட்ஸ் பில்லியனராக வளர்ந்து கொண்டிருந்த காலம். மைக்ரோசாப்ட் இணைய உலகிற்கு வரத்துடித்துக்கொண்டிருந்தது. அவர்களின் முன்னே பல ஸ்டார்ட்அப் கம்பெனிகள் Yahoo, AOL, Hotmail என்று கண்ணை உறுத்திக் கொண்டிருந்தார்கள். Hotmail அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக தென்பட்டது. காரணம் அது மக்களின் பெயர், இடம், முகவரி உள்ளிட்ட எண்ணற்ற தகவல்களை எளிதாக பெற வழி செய்தது. மிக எளிதான மார்கெட்டிங் வழி.

மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரையும் இணைந்திருந்தது. இதைவிட நல்ல வாய்ப்பு அவர்களுக்கு கிட்டுமா? சபீர் பாட்டியாவிடம் பேரம் தொடங்கியது. 400 Million அமெரிக்கடாலருக்கு வாங்கினார்கள். கூடவே அவரை அந்த தளத்தின் தலைவராகவும் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள்.

தொழில்முனையும் ஆர்வம் கொண்ட இளைஞர்களின் கவனம் இப்படியாக இணையத்தின் பக்கம் திரும்ப தொடங்கியது. இதே காலகட்டத்தில் நம்ம சென்னையில் ஒரு ஸ்டார்ட்அப் உருவாக ஆரம்பித்தது. அதன் வெற்றி ஐடியாக்களில் மட்டுமல்ல கார்பொரேட் கலாச்சாரத்திலும் இருந்தது. அது மைக்ரோசாப்டையும் கடுப்பேற்றிய வெற்றிக்கதை.

இசையை தேடி

தரநிலை

மதுரையில் நடந்த ARR – Music Concert பற்றி எழுதவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு சில வரிகளில் அடங்கிவிடும் அனுபவம் இல்லை என்பதால் தள்ளிபோட்டுக் கொண்டே இருந்தேன்.
31th January நிகழ்ச்சி. 30ஆம் தேதி இரவு வரை அதற்கு போகும் வாய்ப்பே இல்லை. அன்று இரவு நண்பர் குமார் chat Windowவில் வந்தார். மதுரையில் இருகிறீர்களா..என்னிடம் ஒரு டிக்கெட் இருக்கிறது என்றார். அடப்பாவிகளா இதெல்லாம் முதல்லயே சொல்றதில்லையா.. என்றேன். அவருக்கே அந்த டிக்கெட் ஒரு Online Contest இல் வெற்றி பெற்று அன்று தான் கிடைத்ததாம். VIP Pass என்றார்.
மனைவியிடம் கேட்டேன். கிட்டத்தட்ட கெஞ்சினேன். அவரும் ஓகே போயிட்டு வாங்க என்றார். பெங்களூரில் இருந்து மதுரைக்கு சனிக்கிழமை இரவு 10:30 மணிக்கு மேல் பஸ் ticket கிடைக்கவில்லை. erail.in இல் தேடினேன். காலையில் சேலத்திற்கு ஒரு ரயில் இருந்தது. ஐந்து மணிக்கு அலாரம் வைத்தேன். கண்ணை மூடி தூங்க முயற்சித்தேன். மனம் தூங்கவில்லை. எப்போது விடுயும் என்றிருந்தது.
விடிந்தது. ஓடினேன். ரெம்ப வருடங்களுக்கு பிறகு மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம். முப்பத்தாறு வயதில் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான பிறகு கல்லூரி மாணவனை போல இசைக்காக இந்த பரபரப்பு பயணம். இதெல்லாம் தேவையா.. என்று தோன்றவும் சிரிப்பு வந்தது.
சேலம் வந்தது. புது பஸ் ஸ்டாண்டில் காலை சிற்றுண்டி முடித்தாயிற்று. மதுரை பஸ் எங்கே என்று தேடினேன். மூன்று பஸ் இருந்தாலும் ஒரு பஸ் மட்டும் கிளம்புவதாக இருந்தது. நீண்ட தூர அரசு பேருந்து பயணம் எத்தனை கடுப்படிக்கும் என்று தெரியும் தான். வேறுவழியில்லை. காரில் மதுரைக்கு 7 மணி நேரத்தில் சென்றுவிடுவேன் நடுவில் ஒரு மணிநேர உணவு இடைவேளை உட்பட. அன்று அந்த அரசுப் பேருந்து தான் எனக்கான ஒரே வாய்ப்பு.
சேலத்திற்கும் மதுரைக்கும் நடுவில் இத்தனை ஊர்கள் உண்டா என்று வியக்கவைத்தார்கள், ஒவ்வொரு ஊருக்குள்ளும் சென்று நிறுத்தி.
குமார் கால் பண்ணினார். வந்துகிட்டே இருக்கேன் குமார் என்றேன். ஒரு குட் நியுஸ். VIP பாஸ் இல்லை அதுக்கும் மேல என்றார். VVIP பாஸா என்றேன். இல்லை அதுக்கும் மேல MIP பாஸ் என்றார். 25000ரூபாய் மதிப்புள்ள முதல் வரிசை டிக்கெட். பயணக்களைப்பு பறந்து போய் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஆவல் அதிகமானது.
மதுரை ஆரப்பாளையம் சேர்ந்த போது மணி 4.30 இன்னும் ஒன்னரை மணி நேரத்தில் நிகழ்ச்சி. போன் ரிங் அடித்தது. மீண்டும் குமார். எங்கே இருக்கீங்க. நான் உங்களை பிக்கப் பண்ணிக்றேன் என்றார்
வந்துகிட்டே இருக்கேன். அம்பிகா தியேட்டர் வந்துடுங்க நான் வந்துடறேன் என்றேன். வந்தேன். குமார் நின்றிருந்தார்.
தொடர்கிறேன்.

அசிம்-ஓ-சான் சஹேன்சா

தரநிலை

எதெல்லாம் முழுமனதையும் ஈடுபட வைக்கிறதோ அதெல்லாம் பேரின்பம் தான் என்று ஓஷோ சொல்லியதாக ஞாபகம்.

மனம் எப்போதும் பல்வேறு சிறகுகளாய், ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பயணிப்பது என் வழக்கமான அனுபவம்.

குவி ஆடியில்( Covex Lens) பட்ட சூரிய கதிர்கள் குவிந்து நெருப்பை பற்ற வைப்பது போன்று மனம் குவிந்து ஒன்றில் பற்றிக்கொள்வது சில நேரங்களில் மட்டுமே. அறிந்தே இடாத புதிய உலகை காட்டும் புத்தகங்கள், இணைய கட்டுரைகள் படிக்கும் போது, இசையை கேட்கும் போது, ரசித்து எழுதும் போது, ஒன்றை விளக்கி பேசும்போது விவாதிக்கும் போது, உறவுகொள்ளும் போது, எனக்கு பிடித்த உணவை உண்ணும் போது, அட்டகாசமான திரைப்படம் பார்க்கும் போது என்று நிறைய உண்டு.

இன்று ஜோதாஅக்பர் பாட்டு ரெம்ப நாட்களுக்கு பிறகு கேட்டேன். ஒரு சமயம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்டுவிடவேண்டும். அப்படி ஒரு ஈர்ப்பு இருந்தது. அமிர்தமே என்றாலும் அளவோடு அல்லவா.. ஒருநாள் சலிப்பு வந்தது. கேட்பதை நிறுத்தினேன். இன்று மகளுக்கு பாட்டு வைக்கும்போது தற்செயலாக ஜோதாஅக்பர் கேட்டேன். மகளை மறந்தேன். அவள் திட்டிவிட்டு வேறுவேலை பார்க்க போய்விட்டாள். எல்லாப்பாட்டுகளையும் முழுவதுமாக கேட்டபிறகே எழுந்துவந்தேன். யூக்கலிப்டஸ் தைலத்தை தேய்த்த முக்கில் மூச்சை இழுத்துவிட்டால் ஒரு குளிர்ச்சி வருமே அதுபோல இருந்தது.


இந்த இசையை படைத்தவர் ஏ. ஆர். ரஹ்மான் என்றாலும் இயக்குனர் அசுதோஷ்கௌரிக்கர் அமைத்த திரைகளம் தான் காரணம் என்பேன். இவர்கள் இருவர் கூட்டணி எப்போதும் அற்புதம் படைக்கும் இசையை தான் கொடுத்திருக்கிறது, லகான், தேஷ், ஜோதாஅக்பர். இதில் ஜோதாஅக்பர் அற்புதத்திலும் அபூர்வமானது. அசிம்-ஓ-சான் சஹேன்சா ஒரு அதகளம். (இன்றும் பல டிவி நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் வரும்போது இந்த பாட்டின் ஆரம்பத்தை தான் BGM ஆக போடுகிறார்கள்). இதை கேட்கும் போதெல்லாம் மனம் புடைக்கும், திமிரும். கண்ணை மூடி கேட்டால் கேட்பவரையே அக்பராக்கி விடும்.

மனுமோஹனா.. பாடல் பக்தியில் கரையும் மீராவின் வகை. நான் ஒரு வளரும் நாத்திகன். யோகம்,பக்தி, ஆன்மிகம் இவற்றை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்குகிறேன், ” Learn from yesterday, live for today, hope for tomorrow. The important thing is to not   stop questioning “என்று அறிவியல்  மேதை ஐன்ஸ்டீன் கூறியதை போல.

ஆனால் அதே ஐன்ஸ்டீன் இன்னொரு பொன்மொழியையும் கூறியிருக்கிறார்
“It would be possible to describe everything scientifically, but it would make no sense; it would be without meaning, as if you described a Beethoven symphony as a variation of wave pressure” இந்த பாடலை கேட்கும் போது ஜோதா தத்தளிக்கும் மனதை நிலைக்கு கொண்டுவர கண்ணனிடம் அவள் பக்தியுடன் உருகி வேண்டுவதை துல்லியமாக உணர்கிறேன். அவளுடன் இணைந்து நானும் பாடுகின்றேன் பக்தியினால் அல்ல, பரவசத்தால்.

க்வாஜாஜி க்வாஜா..பாடல் மனுமொஹனாவிற்கு இணையான ஆணின் பரவசம். நான் சூபிகளின் கதைகளை கேட்டிருக்கிறேன். அவர்கள் மெய்மறக்க செய்யும் பக்தி பாடல்களை தெருவில் பாடிக்கொண்டு வருவார்கள். கணீர் என்ற குரலில் இருக்கும். இது அப்படி அல்ல. இதை நான் எப்படி விளக்குவேன். நடுக்கடலில் அல்லது மலை முகட்டில் இருந்து இரவில் வானத்தை பார்க்கும்போது இந்த பிரபஞ்சத்தை அதன் ஒரு பகுதியை பார்க்கும்போது இதில் நம் ஒரு அணுவின் அணுவளவு கூட இல்லை என்று தோன்றுமல்லவா.. இன்பம், துன்பம், ஆணவம், அடிமைத்தனம் எல்லாம் மறந்து, மனம் தளும்பாமல் அமைதி அடையும் அல்லவா.. அதை இந்தப்பாடலில் உணர முடியும்.


இப்படியாக இன்றைய பொழுது மிக ஆனந்தமாக இசையுடன் தொடங்கியுள்ளது. நல்லதே நடக்கும் என்று தோன்றுகிறது. இது போதாதா.. இந்த வாழ்க்கைக்கு

காதல் என்னவெல்லாம் செய்யும்

தரநிலை

நான் இயற்கையே கடவுள் என்பவன். காதல் இயற்கையானது. ஆதலால் காதல் செய்வீர். சாதி, மதம், இனம், மொழி, தேச எல்லைகள் கடந்து காதல் செய்வீர்.
 
காதலை விட ஒருவருக்கு சக்தி தருவது எதுவும் இல்லை
 
PK மகாநந்தியாவின் காதல் மிகச்சிறந்த உதாரணம்
mahanandia-painting
நந்தியா இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலத்தில், பின்தங்கிய சாதியடுக்கில், வறுமையான குடும்பத்தில் பிறந்த ஓவிய கலைஞன். முக்கிதக்கி ஒரிசாவின் கள்ளிக்கோட்டை அரசு கலைகல்லூரியில் ஓவியம்,கைவினை படிப்பை முடிக்கிறான். பிறகு டில்லி பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைக்கிறது. தங்குவதற்கு தேவையான பணம் போதவில்லை, தெருவோரம், பஸ் நிலையம் என்று கிடைத்த இடத்தில் தங்குகிறான். கன்னாட் பிளேஸ்ஸில் இருக்கும் நீருற்றின் அருகில் உட்கார்ந்து படம் வரைவான். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது கல்விப்பயணத்தை தொடர்கிறான்.
 
அப்போது சர்லேட் வான் ஸ்கெட்வின் என்ற ஸ்பெயின் சீமாட்டியை டில்லியில் சந்திக்கிறான். அந்த பெண் இவனிடம் தன்னை ஓவியமாக வரைய வேண்டுகிறாள்.
mahanandia-von
இருவரும் காதல்வயப்படுகிறார்கள். டில்லியில் ஒருமாதம் தங்கள் காதல் ஓவியத்தை தீட்டுகிறார்கள். அவளுக்கு பயணத்திட்டம் முடிகிறது. ஸ்பெயின் திரும்புகிறாள்.
 
இருந்தபோதும் தான் நிச்சயம் ஸ்பெயின் வந்து அவளை சந்திப்பதாக கடிதம் எழுதுகிறான்.
 
சொன்னதை போலவே கிளம்பிவிட்டான் தன்னிடம் இருக்கும் அத்தனை சொத்துக்களையும் விற்று ஒரு பழைய சைக்கிளும், 80$ பணத்துடன் ஸ்வீடனுக்கு
 
அந்தகாலத்தில் ஹிப்பி கலாச்சாரம் பரவலாக இருந்தகாரணத்தால் லண்டனில் இருந்து கோவா வரை மிக நீண்ட பயணத்திற்கு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட பஸ்கள் விடப்பட்டு இருந்திருக்கிறது. அவை இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், வழியாக ஐரோப்பா வரை சென்றுள்ளது.
 
அவளை வரைந்த ஓவியத்துடன், அவன் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். 3600 கிமீ தூரம் கடும்குளிர், கடும்வெயில், கரடுமுரடான மலைப்பாதைகள், பாலைவனங்கள், காடுகள் எல்லாவற்றையும், தேச எல்லைகளை கடந்து பயணிக்கிறான்.
mahanandiya_traveling_map
பயணத்தில் உணவுக்கும்,பயணத்திற்கும் வேண்டி பார்ப்பவர்களை வரைந்து கொடுத்து கொஞ்சம் சம்பாதிக்கிறான்.
 
பிற்பாடு அவன் பேட்டியில் “நான் என் காதலுக்காகத்தான் சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மற்றபடி எனக்கு சைக்கிள் பயணம் பிடிக்காது” என்கிறான்.
 
ஸ்பெயினில் உள்ள போரஸ் என்ற அந்த நகரத்தை அடைகிறான். எல்லைகாவலாளிகள் இவனை விசாரிக்கிறார்கள். தான் தன் காதலியை தேடி இந்தியாவில் இருந்து சைக்கிளில் பயணம் செய்து வந்திருப்பதாக சொல்கிறான். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. அடுத்து யார் அந்த பெண்மணி என்று விசாரிக்கிறார்கள். அவன் வரைந்த ஓவியத்தை காட்டுகிறான். அவர்களுக்கு மயக்கமே வருகிறது. ஸ்பெயின் தேசத்தின் மிக முக்கியமான பாரம்பரியமான ராயல் பிரபு குடும்பத்தின் பெண் அவள்.
 
அவனின் மெய்சிலிர்க்க வைக்கும் காதல் அவளின் குடும்பத்தினை பேச்சற்று போகச்செய்கிறது. ஒன்றும் சொல்லமுடியவில்லை. திருமணம் நடக்கிறது.
mahanandia-lotte_2016
இது வெறும் உணர்ச்சிவெளிப்பாடு ரெம்பகாலம் நீடிக்காது என்று நிறையபேர் ஆருடம் சொன்னார்கள். அவர்கள் காதல் நாற்பது வருடங்களுக்கும் மேலாக இன்றும் வளர்கிறது இரண்டு பிள்ளைகளுடன். ஸ்பெயினில் இசையும் ஓவியமுமாக இன்றும் அவர்கள் காதலை கலையை வளர்கிறார்கள். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இந்தியாவில் இருக்கும் தாழ்த்தப்பட்டமக்களின் கல்விக்கு உதவி செய்கிறார்கள்.
mahanandia-family
எந்த மண்ணில் அவமானங்கள் அடைந்தானோ, எந்த ஊர் மக்கள் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி கல்லால் அடித்தார்களோ அதே ஊர் முப்பது வருடங்களுக்கு பிறகு ஒருநாள் ஒரிசா புயலில் வெள்ளத்தில் துன்புற்ற செய்தி அறிந்தபோது ஸ்பெயினில் இருந்து தன்மனைவியுடன் ஓடிவந்தான். ஒரிய அரசு அவர்களுக்கு தனி ஹெலிகாப்டர் கொடுத்து அவனது ஊருக்கு அனுப்பிவைத்தது.
 
காதல் என் மீது கல்லெறிந்தவர்களை மன்னிக்கும் சக்தியை கொடுத்தது. அவர்களுக்கு கல்வி அறிவு தேவை. அதை கொடுக்க என்னால் இயன்ற உதவியை செய்வேன். எங்களது கதை பலருக்கு நம்பிக்கை கொடுப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி
 
ஆதலால் காதல் செய்வீர்

யுகம் யுகமாய் மனிதன் -இரண்டாம் பகுதி

தரநிலை

 

இன்று ஆரியர்கள் என்று குறிப்பிடப்படும் இரானிய ஐரோப்பிய மூதாதையர் கூட்டம் முதன்முதலில் இந்தியாவில் வடமேற்குப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக குடியேற ஆரம்பித்தது. அவர்கள் நூற்றாண்டுகளாக பயணப்பட்டு கொண்டிருந்ததால் நாடோடி நாகரிகம் கொண்ட காட்டுவாசி கூட்டமாகவே இருந்தார்கள்.

Aryans_entering_India

அந்த சமயம் சிந்துசமவெளியில் ஹரப்பா, மொஹென்ஜோ-தரோ இரு பெரும் நகரங்கள் கொண்ட நகர நாகரிகத்தை கட்டமைத்து, விவசாயம் செய்து, வியாபாரம் செய்து என்று முன்னேறிய சமூகமாக ஆதி இந்திய கூட்டம் வாழ்ந்து வந்தது. இதற்கு அடிப்படை காரணம் பல நூற்றாண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருந்ததும் போர்கள் எதுவும் இன்றி இருந்ததும் தான். அதனால் ராணுவம், காவல் படை என்று பாதுகாப்பு அரண் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்திருந்த இந்த கூட்டத்தின் மேல் ஆரிய காட்டுவாசி கூட்டம் தாக்குதல் நடத்தியதால் செய்வதறியாது சிந்து மக்கள் சிதறி ஓடுகின்றார்கள். அதில் ஒரு கூட்டம் விந்திய மலையை தாண்டி தென்புறமும், கங்கை நதியை நோக்கி ஒரு கூட்டமும் நகர்கிறது.

Late_Vedic_Culture_(1100-500_BCE)இந்தோ-ஆரிய கலப்பின கூட்டம் இன்றைய பஞ்சாப், ஹரியானா பகுதியில் உருவாக ஆரம்பிக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சிந்துநதி முதல் கங்கை நதிவரை பரவுகிறார்கள். ஆதி கங்கைநதி இந்திய கூட்டம் இன்னும் கிழக்கு நோக்கி செல்கிறது. அவர்கள் தான் தென்கிழக்கு ஆசிய மக்களின் ( தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா) மக்களின் முன்னோடி.

ஆரிய கூட்டம் ஆதி இந்தியர்களோடு மேலும் மேலும் கலப்பு ஏற்படுவதை விரும்பவில்லை. பார்பனியம் தோன்றுகிறது. அது சாதி அடுக்குகளை கட்டமைக்கிறது. விவசாயகுடிகளான ஆதி மக்களை படிநிலையில் கீழே வைக்கிறது. விவசாய குடிகளின் ஆடு, மாடுகளை யாகம், பலி என்ற பெயரால் கொன்று தின்கிறது. இது நடந்தது கிமு 2000 முதல் கிமு 500 வரை. இவ்வாறு 1500 வருடங்களுக்கும் மேலாக மாடுகளை கொன்று மூன்று வேளையும் தின்கிறார்கள் தின்கிறார்கள் தின்றுகொண்டே இருக்கிறார்கள். விவசாயத்திற்கு கூட மாடுகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது அத்தனையும் கடவுளின் பெயரால் நடைபெறுவதால் மக்கள் அச்சப்படுகிறார்கள்.

இதை எதிர்த்து இரண்டு பெரும் இயக்கங்கள் உருவாகிறது. அவை மக்களிடம் மிகுந்த செல்வாக்கையும் பெறுகிறது. அவை தான் சமணம் மற்றும் புத்தம்.இதனால் சனாதன வேதிய கோட்பாடுகளும் கலாச்சாரங்களும் வலுவிழக்கிறது. நான் ஏன் இவற்றை மதம் என்று குறிப்பிடவில்லை. அன்றையதினம் இவை இரண்டும் மதங்கள் அல்ல. மக்கள் இயக்கங்கள் அவ்வளவே. அவற்றிற்கு ஆன்மிக மந்திரக் கதைகள் தோன்றியது பிறகு தான்.

( எல்லாமதங்களின் ஆரம்பமும் கொடுமைகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி இயக்கமாகவே இருந்தது. இது கிறிஸ்துவ, இஸ்லாமிய, யூத, கான்பூசியஸ் என்று இந்திய துணைகண்டத்தில் தோன்றாத எல்லா மதங்களுக்கும் பொருந்தும். இவற்றை தோற்றுவித்தவர்கள் அனைவரும் சக மனிதர்களின் மீது அன்பு கொண்ட உன்னதமான மனிதர்கள். இவர்களை தேவ தூதர்கள், பிதாமகன்கள், கடவுள்கள், மகான்கள் ஆக்கியது இவர்களின் காலத்திற்கு பிறகு அவர்களின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டி உருவாக்கப்பட்ட புனைவுகள் தான்.)

புத்தமும், சமணமும் வீரியத்துடன் பரவுவதற்கு காரணம் மாட்டு அரசியல் தான். வேதிய கலாச்சாரம் வலுவிழக்கும் போது, சாதியம், பார்ப்பனீயம் எல்லாமும் வலுவிழந்தது. இதை மாற்ற அவர்கள் கொண்ட மிக தந்திரமான வழிமுறை தான் புலால் உண்ணாமை. இப்படிதான் பார்பனர்கள் இழந்த தங்கள் செல்வாக்கை மீட்டெடுத்தார்கள். இந்த இரு மக்கள் புரட்சி ஏற்படும் முன்பு வரை ஆட்சி அதிகார பீடத்தில் இருந்தவர்கள் பார்பனர்களே. அரசர் என்ற ஒற்றை குடை அப்போது இருந்ததாக தெரியவில்லை. மாறாக ஒரு கூட்டமே ஆட்சிபீடத்தில் இருந்திருக்கலாம். அதனால் தான் இந்த காலகட்டத்தின் வரலாற்றில் அரசர் பற்றிய குறிப்புகளே இல்லை.

போர்களில், மக்கள் புரட்சிகளில் தலைமை தாங்கியவர்கள் ஆட்சிபீடத்தை கைபற்றினார்கள். பார்பனர்கள் வழிவிட்டு ஆட்சிபீடத்தில் இருந்தவர்களின் பின்னால் இருந்து ஆட்சி செய்ய புதிய கடவுள்களை கதைகளை உருவாக்கினர். அதில் கடவுள்களாக வரிக்கபட்டவர்கள் அனைவரும் முந்தையகாலத்தின் செல்வாக்கு பெற்ற மன்னர்கள் தாம். இவ்வாறு தான் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்கள் பிறந்தது.

காலம்காலமாக தென்னிந்தியாவில் போற்றப்பட்டு வந்த சிவன் என்ற ஆதிமனிதன் கடவுள் ஆன கதை இப்படிதான். பிற்பாடு திருமால் என்றொரு ஆதிவாசியும் கடவுள் ஆனார். ஆகவே தான் இந்த கடவுள்கள் நீலநிறத்திலும், பச்சை நிறத்திலும் இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் கருமைநிற ஆதிமனிதர்கள், இந்தியாவின் பூர்வகுடிகள். பிறகு வந்த நல்ல அரசர்கள் அவர்களின் அவதாரங்கள் ஆனார்கள்.

இப்படியாக பலகதைகளுடன் சமண மதத்தையும், புத்த மதத்தையும் கட்டுபடுத்திய வேதியமதத்திற்கு மாற்றாக சைவம், வைணவம், விநாயக வழிபாடு, சக்தி வழிபாடு உள்ளிட்ட 64 மதங்கள் பிறந்தது. ( மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இவற்றை எல்லாம் ஒரே மதமாக இந்துமதம் என்று குறிப்பிடும் வரை இப்படிதான் இருந்தது.) இவர்களுக்குள் பலமுறை அடிதடி ரகளை, போர்கள் எல்லாம் நடந்திருக்கிறது.

இதற்கு பின்னால் நடந்தவை எல்லாம் உங்களில் பலருக்கும் தெரிந்த(திரிந்த), பாடப்புத்தகங்களில் படித்த கதைதான் என்பதால் இத்தோடு முடிக்கிறேன். இந்தக்கதையை சொல்வதற்கு அடிப்படை காரணம் நமது பாடபுத்தகங்கள், பத்திரிகைகளில் வரும் கட்டுரைகள் சொல்லும் வரலாறு அனைத்தும் வெறும் 2000 வருட கதை மட்டுமே. அதிகபட்சம் 3000 வருடங்கள். அதற்கு பின்னாலும் சென்று மனித இனத்தின் வரலாறை படித்தால் தான் நாம் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது புரியும்.

நான் இங்கு சொன்னது எல்லாம் கதை சுருக்கம் தான். ஒவ்வொரு வரியையும் விரித்து எழுதினால் ஆயிரம் பக்கத்திற்கு குறையாத இருநூறு அத்தியாயங்கள் கொண்ட தலையணை சைசிற்கு இரண்டு புத்தகங்கள் எழுதலாம்.

யுகம் யுகமாய் மனிதன்

தரநிலை

பல மில்லியன்கள் வருட கதை, ஒரு பத்தியில் சொல்ல முயற்சிக்கிறேன். 8 மில்லியன் (80 லட்சம்) வருடங்களுக்கு முன்பு (அதாவது இந்துமத புராண கதைப்படி துவாபர யுகத்தில்) டைனோசர்கள் அழிந்து, குகைக்குள் வாழும் உருவம் படைத்த மிருங்கங்கள் மட்டும் பிழைத்து வாழ்த்தன. அதில் மனிதனுக்கும் சிம்பன்சி, கொரில்லா உள்ளிட்ட குரங்களுக்கும் ஒரே முப்பாட்டன் ஒரு காட்டுக்குரங்கு ஆப்ப்ரிக்காவில் வாழ்ந்து வந்தது. அதற்கு இன்றைய விஞ்ஞான உலகம் வைத்த பெயர் ஹோமினினை. அது ஒரு இரண்டரை மில்லியனுக்கு பிறகு ஹோமினி என்று ஒரு பாட்டன் பிறந்தான். அவன் சிம்பன்சிக்கும் பாட்டன்.

அப்புறம் இன்னொரு இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஹோமோ என்ற முதல் மனிதனின் பாட்டன் பிறந்தான். இன்றைக்குள்ள சிம்பன்சிக்கும் அவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. முதன் முதலில் இரண்டு காலில் நின்று நடக்க ஆரம்பித்தான்.

அந்த சமயமும் அவன் நெருப்பெல்லாம் கண்டுபிடிக்கவில்லை. மற்ற மனித குரங்குகளுடன் மோத முடியாத அளவுக்கு ஆள் கொஞ்சம் வீக். அதனால் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. கல் ஆயுதங்களை தயார்செய்தான். ஆனாலும் அவன் கூட்டத்தில் சிலரால் பிற குரங்கு இனங்களை சமாளிக்க முடியவில்லை. கூட்டத்தோடு நகர ஆரம்பித்தான். பிரிந்து போனவன் ஆசியாவில் சீனா வரைக்கும் சென்றான். அதே போல ஐரோப்பாவில் ஸ்வீடன் வரைக்கும் சென்றான்.

இந்த சமயத்தில் ஆப்ரிக்காவில் ஒரு இரண்டு மில்லியன் ஆண்டுகள் கடந்து(5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு) ஹோமோசேப்பியன்ஸ் என்ற பீட்டா வெர்சன்-2 மனிதன் உருவாகி இருந்தான். இந்த புதிய மனிதன் கூட்டம் கூட்டமாக வேட்டையாட பழகி இருந்தான். குகையில் வாழவும் குகையை கல்லை நகர்த்தி அடைத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழவும், நெருப்பு என்றால் ஆபத்து என்றும் அறிந்தான். கறியை பச்சையாக தான் சாப்பிட்டான்.

பிறகு ஒரு மூன்று லட்சம் ஆண்டுகள் போயின. இன்னும் தெளிவான ஒரு மனிதன் உருவானான். பல வருடங்கள் குகையிலேயே இருந்ததால் இவனுக்கு ரோமங்கள் குறைந்தது. தோல் கொஞ்சம் இளகியது. ( இங்கே ஒரு சுவாரஸ்யமான செய்தி. பெண் ஏன் மிருதுவாக இருக்கிறாள் என்றால் மனிதன் கூட்டமாக வாழத்தொடங்கிய பிறகு பெண்களையும், குழந்தைகளையும் குகைக்குள் விட்டுட்டு சென்றான். இருந்தாலும் வேட்டைக்கு சென்ற பெண்ணினம் அன்று இருந்தது. அப்போது கூட்டத்தின் தலைமை பொறுப்பு பெண்ணிடமே இருந்தது.)

ஒரே இடத்தில் பல மில்லியன்கள் வாழ்ந்ததால் கூட்டம் பெருகியது. முதல் போர் மத்திய ஆப்ரிக்காவில் தான் நிகழ்ந்தது. பல கூட்டங்கள் உருவாகின. முடிவில் ஒவ்வொரு கூட்டமும் புதிய உலகை தேடி வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்தது. நைல் நதிக்கரையில் பலகாலம் தங்கியது. பல கூட்டம் அங்கிருந்து திசைக்கு ஒன்றாக நகர்ந்தது. இதற்குள் இரண்டு லட்சம் வருடங்கள் கழிந்தது

இன்னும் சில ஆதிமனித கூட்டங்கள் ஆப்ரிக்காவின் மத்தியில் இருந்து நைல்நதியை நோக்கி நகர்ந்தது. அங்கு சில காலம் தங்கி மீண்டும் கிழக்கு திசையில் நகர்ந்தார்கள். அதில் ஒரு கூட்டம் சிந்து நதியை தொட்டு அங்கு ஒரு நாகரிகத்தை தோற்றுவித்தது. இந்த சமயத்தில் மொழி பிறந்தது. பேச ஆரம்பித்தான். முதல் எழுத்துக்கள் சித்திர எழுத்துக்கள். அங்கும் கூட்டம் பெருக மீண்டும் இடப்பெயர்வு.

கங்கை பிரம்மபுத்திரா வழியாக சீனா, மங்கோலியா, ரஷ்யா, அலாஸ்கா வழியாக அமெரிக்க கண்டத்தில் முதல் மனிதக் கூட்டம் கால் வைத்தது. குளிர் தாங்கமுடியாமல் வட அமெரிக்காவில் தென் பகுதிக்கு வந்தார்கள்.

இன்னொரு பெரும்கூட்டம் சிந்துநதி கரையில் இருந்து தென் பகுதிக்கு நகர்ந்தது. தக்காண பீடபூமி எங்கும் குளிர் நிலவியது. ஆகவே இன்னும் தென்புறம் சென்று இலங்கை வரை சென்று முட்டிக்கொண்டு நின்றது. இவர்கள் தான் நம்ம திராவிட பாட்டன்கள். இது நடந்தது 20000-30000 வருடங்களுக்கு முன்பு. அப்போதும் மலைகளின் குகைகளை விட்டு மனிதன் வெளிவரவில்லை. இலங்கையின் குகைகளில் இன்றும் அவன் வரைந்த குகை ஓவியங்கள் உண்டு. தமிழ்நாட்டின் குகைகளிலும் காணக்கிடைக்கிறது. ஆற்றுப்படுகைக்கு நகர்ந்தான். இப்போது தான் நாகரிகம் தலையெடுக்க ஆரம்பித்தது.

விவசாயம் பிறந்தது இப்போது தான். கால்நடைகளை பழக்கினான். இந்தியாவின் வடமேற்கு, வடக்கு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகள் எங்கும் பரவி இருந்தான். அரசுகள் எதுவுமில்லை. கூட்டம் கூட்டமாக வாழப் பழகி இருந்தான். எட்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தான் அரசாங்கம் எகிப்திலும், சிந்துசமவெளிப் பகுதியிலும் நிகழ்ந்தது. அது தென்னிந்தியா வரை இருந்தது.

மறுபுறம் ஐரோப்பாவில் 40000 வருடங்களுக்கு முன்பு நகர்ந்த இனக்குழுவிற்கும், பிற்பாடு சென்ற இனக்குழுவிற்கும் அடிக்கடி சண்டை நிகழ்ந்தது. ஐரோப்பிய இனக்குழுவிற்கு தோல்வியாதி தோன்றியது. அதாவது வெள்ளைப்புள்ளிகள் தோன்றி அது உடலெங்கும் பரவியது. ஐரோப்பாவில் போதிய சூரிய ஒளி இல்லாததால் மெலனின் என்ற சுரப்பி தனது செயலை முற்றிலுமாக நிறுத்தி இருந்தது. இது பல தலைமுறைக்கு ஜீன்களில் வழியே சென்று ஐரோப்பியர்களின் நிறம் வெளுக்க ஆரம்பித்தது.

இந்த சமயத்தில் ஐரோப்பா முழுதும் பல இனக் குழுக்கள் தோன்றியிருந்தது . கிழக்கு பகுதி ஐரோப்பியர்களை ஆப்ரிக்க இனக்குழுக்கள் மோதிக்கொண்டனர். பலசமயம் ஆப்ரிக்க இனக்குழுவின் ஆதிக்கம் அதிகம் இருந்த காரணத்தால் ஐரோப்பிய இனக்குழுவில் ஒன்று கிழக்கு நோக்கி நகர்ந்தனர். சைபிரியக்காடும், சீனாவின் தக்ளாமகன் பாலைவனமும், இமயமலைதொடரும் ஒரு பெரும் அரண் போல தடுத்தது. இது நிகழும் போது 37000 வருடங்கள் கடந்துவிடுகிறது.

இந்தியமேற்கு கடற்கரையை ஒட்டியும், தென் புறமும் பல்வேறு சிறு குழுக்களாக கரியநிறம் கொண்ட இனக்குழு(அநேகமாக நம்ம தமிழ் மூதாதையர்களாக இருக்கலாம்) ஒன்று பரவலாக சில அரசுகள் இருந்தபோதும் போர்கள் எதுவுமின்றி அமைதியாக வாழ்ந்தது. ஒரு மூவாயிரம் வருடத்திற்கு முன்பாக கைபர் கணவாய் வழியாக இந்திய வாணிபர்கள் குழு ஐரோப்பாவிற்கு வாணிபம் செல்கிறது. இதை கண்ட பல்லாயிரம் வருடங்களாக திக்கு தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த இரானில் இருந்த அந்த பழைய ஐரோப்பியகுழு வழியை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் நுழைகிறது.

இங்கே ஒரு இடைவெளி விட்டு அடுத்தவார சனிக்கிழமை எழுதுகிறேன்GeoTimeSpiral