Tag Archives: கோபம்

கருணாநிதி vs ஜெயலலிதா : உங்கள் ஓட்டு யாருக்கு

பதிவின் வடிவம்

இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கு எப்படிப்பார்த்தாலும் நல்லகாலம் பிறக்க போவதில்லை என்பது நன்றாக தெரிகிறது. இருந்த போதும் இருக்கிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்க்க கீழே உள்ள கேள்விகள் உதவும். இது எனக்கு ஒரு நண்பர் மூலம் skype இல் வந்தது. இந்த கேள்விகளை எழுப்பிய அந்த முகம் தெரியாத நண்பருக்கு நன்றி

உங்கள் ஓட்டு யாருக்கு என்று இதை வைத்து தீர்மானியுங்கள்.

ஜெயலலிதாவுக்கு:

1. உங்களை விட்டால் கட்சியில் வேறு தலைவரே இல்லையே? இப்படி ஒரு கட்சி நடத்துவது சரியா?

2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் ?

3. யாருமே நெருங்கமுடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களை சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாக தனியே வாழவேண்டியதுதானே?

4. அ.தி.மு.கவை சசிகலா குடும்பம்தான் ஆக்ரமித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இதை மாற்ற ஏதாவது திட்டம் உண்டா?

5. கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் இஷ்டப்படி கூட்டணிகளை உடைப்பது உங்கள் வழக்கம். இந்த அணுகுமுறை மாறுமா?

6. இலவசங்கள் தவிர, உங்கள் பத்தாண்டு ஆட்சியில் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் தொடர்பாக ஏதாவது உருப்படியான நடவடிக்கைகள் செய்தது உண்டா?

7. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து எத்தனை போராட்டங்களை நீங்கள் தலைமை ஏற்று நடத்தினீh;கள்?

கருணாநிதிக்கு:

1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்கு பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூசைக்கு செல்வதாக செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள்,. நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?
4. முதல்வராக சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பெயருக்கு ஒரு பட்டப் படிப்பு படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

6. உங்கள் குடும்ப பிரச்சனையில் 3 பேரை தீயிட்டு கொளுத்தியதை நினைத்தபோதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?
7. தமிழக அரசிற்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படி திருப்பிச் செலுத்த்ப் போகிறீர்கள் ? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை அதற்கு பதில் ஏற்கனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன் ? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா ?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானது. தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? என்னைப் பின்பற்றவேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

10. கூவத்தை தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்த பணம் என்னவாயிற்று ? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள் ? ஏன் ஆயிரக்கணக்கான்வர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள் ? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளி நாட்டில் வாழ்கிறேன். ஒரு அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசு கூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வொரு இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு ?.

13. மின் வெட்டை தடுக்க 5 ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?

15. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்கு சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்சினையை எப்படி கையாண்டிருப்பீh;கள்?

16. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து எடுத்தது ஏன்?
17. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவி தன் வாரிசுகளுக்கு வாங்குவதற்கு தவிர நீங்கள் டெல்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

18. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றிற்கு ஓடோடி செல்லும் நீங்கள் , எத்தனை முறை இறந்து போன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள்?

19. பல வருடங்களாக கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களை விட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி ?

20. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் , மணல் கொள்ளை, திரைப்படத்துறை முழுமையான ஆக்ரமிப்புக்கும் உள்ள தொடர்புகளை உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

இருவருக்கும்:

1. விவசாயம் லாபமில்லா தொழிலாக போய்விட்டது. தனியார் தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. அவை சில காலம் கழித்து பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாய கூலியும், இடுபொருட்கள் செலவும் அதிகரித்துவிட்டது. விவசாய விளைபொருட்களின் விலையை விவசாயி தீர்மானிக்க முடியவில்லை. பதுக்கல் வியாபாரிகளே அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?

2. முன்பெல்லாம் உள்கட்டமைப்பு மூலதன செலவுகளுக்கு பட்ஜெட்டிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது உலக வங்கியிலிருந்தும், நபார்டிலிருந்தும் கடன் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. இது ஒரு நல்ல போக்கா?

3. பத்திர பதிவு துறை, போக்குவரத்து துறை, காவல் துறை, பொது பணித்துறை இந்த நான்கு துறைகளில்தான் அதிகம் லஞ்சம் புழங்குகிறது. இதை கனிசமாக குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?

4. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ?

5. சட்டமன்றத்தில் ஜால்ரா பேச்சுகளை அடியோடு ஒழித்துவிட்டு அசல் பிரச்சினைகளைப் பற்றி ஆழமான விவாதங்களை நடக்கச் செய்யாமல் உங்கள் கட்சியினரைக் கெடுத்து வைத்திருப்பதை எப்போது மாற்றுவீர்கள் /

6. தலைமையை வைத்துத்தான் தொண்டர்கள் இருப்பார்கள். அப்பழுக்கற்ற அரசியல்வாதி, கண்ணியமான அரசியல்வாதி என்ற நற்பெயரை சம்பாதிக்க ஏன் இதுவரை முயற்சிக்க வில்லை?

7. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசு மதுக்கடைகள் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி உங்களுக்கு அக்கறையே கிடையாதா?

8. இவ்வளவு தவறையும் பண்ணிட்டு மறுபடியும் மறுபடியும் மக்கள் முன்னாடி வந்து நிக்கிறதுக்கு
உங்களுக்கு வெட்கமாவே இருக்காதா ?

என்ன கொடுமை சார் இது

பதிவின் வடிவம்

என்ன மாதிரியான பைத்தியகார உலகில் வாழ்ந்துகொண்டிருகிறேன்.

கடுப்பு 1 ) இன்று என் அலுவலகத்தில் இருந்து ரயில்வே டிக்கெட் பதிவு செய்ய முயற்சி செய்தேன். மூன்று தடவை முயற்சித்தும் பணத்தை வங்கியில் இருந்து கழித்துக்கொண்டு ரயில்வே ரெஸ்பான்ஸ் பக்கம் பல்லை இளித்தது. ருபாய் 900 தண்டமாக போனது தான் மிச்சம். டிக்கெட் பதிவு செய்ய முடியவில்லை.

கடுப்பு 2) நான்கு நாட்களுக்கு முன்பு, http://www.rechargeitnow.com மூலம் செல்லுக்கு ரீசார்ஜ் செய்ய முயற்சித்தேன். அதுவும் இப்படியே பல்லிளித்தது. ஆனால் பணம் போகவில்லை.

கடுப்பு 3) இன்று ஒரு புது CMS ஒன்றை பற்றி படிக்க அதனுடைய டெமோ சைட்டுக்கு சென்றேன். அதுவும் பல்லிளித்தது.

என்ன கொடுமை சார் இது ? என்று கேட்பீர்கள். அதுக்கு முன்பு ஒரு முன்கதை சுருக்கத்தை படித்து விடுங்கள்

முன்கதை சுருக்கம் : நான் இந்த கம்பெனி-இல் சேர்ந்து ஏழு மாதங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் எல்லாமே சரியாக இருந்தது. நினைத்த மாதிரியே கம்பெனி அமைந்ததில் ரெம்ப சந்தோசப்பட்டேன், இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை. network manager ஏதோ புது Firewall பதிந்து, இருக்கிற நல்லது கெட்டது என்று பாராமல் கண்டமாதிரி பல தளங்களை தடை செய்தார் . அன்று ஆரம்பித்தது பிரச்சனை. நான் ஒரு UI designer என்பதால் பல தளங்களுக்கு செல்லவேண்டியது எனது வேலை. நான் எங்கேயெல்லாம் சென்றேனோ அது எல்லாம் தடை செய்யப்பட்டு இருந்தது. கடுப்பின் உச்சிக்கே சென்றேன். network manager மற்றும் HR உடன் சண்டை போட வேண்டியிருந்தது. அவர்கள் தரப்பு நியாயத்தை விலா………..வாரியாக சொன்னார்கள். இருந்தும் மனதிற்கு சரி என்று படவில்லை. நானும் பல கம்பெனிகளில் வேலைபார்த்து இருக்கிறேன். எங்கேயும் இதுபோன்ற இணையத்தடை இருந்ததில்லை. எனது முந்தைய கம்பெனியில் ஆயிரம் குறை இருந்தாலும் அவர்கள் எனது விசயத்தில் internet இல் கைவைக்க வில்லை. இங்கே பல சுதந்திரம் இருந்தும் இணைய பயன்பாடு விசயத்தில் அக்கபோரு பண்ணுகிறார்கள்.

இன்றோடு மூன்று முறை சண்டை போட வேண்டி இருந்தது. அவர்களது பதில் திருப்தியாக இல்லை. அவர்களது பதில்கள்

1) மற்ற பல கம்பெனிகளில் gmail கூட தடை செய்கிறார்கள், நாங்கள் அதை செய்வதில்லை என்கிறார்கள் . பல கம்பெனிகளில் வேலைவாய்ப்பு தளங்களை கூட தடை செய்வதில்லை என்பது என் வாதம்

2) நாங்கள் social network தளங்கள் மற்றும் வீடியோ தளங்களை மற்றும் விளம்பரங்களை தடை செய்கிறோம் என்கிறார்கள். social network தளங்களை தடை செய்துவிட்டு போங்கள். விளம்பரங்களை , வீடியோக்களை தடை செய்கிறோம் என்று ஒரு தளத்தை குதறி போட்டு விடுகிறார்கள். பல தளங்கள் online tutorials, product demo , business workflow எல்லாம் வீடியோவில் கொடுத்து Users ஐ வாய்பிளக்க வைத்துகொண்டிருக்கும் காலத்தில் அதை தடை செய்வது எத்தனை பெரிய பைத்தியகாரத்தனம் .

3) இணைய பயன்பாட்டு சுதந்திரத்தால் வேலைத்திறன் ( Productivity )கெடுகிறது என்கிறார்கள் . Productivity கூட்டுவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. சுதந்திரமான நடைமுறை தான் புதிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கும். கூகுளே இதற்கு நல்ல உதாரணம். உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக கூகிள் திகழ அவர்களின் பணி சுதந்திரம்.

என்னமோ போங்க..இன்னும் நிறைய சொல்ல ஆசை. பின்னாடி ஒருத்தி ரெம்ப நேரமா அங்கே என்ன பண்றீங்க..குழந்தைய கொஞ்சம் பார்துக்கலாம்ல என்று பாட ஆரம்பித்துவிட்டாள்.அப்புறம் பேசலாம்

படைத்தவனிடம் ஒரு கேள்வி

பதிவின் வடிவம்

சிறு வயதில் தமிழ் ஆன்மிக புத்தகங்களிலும், பாட நூல்களில் உள்ள செய்யுள்களிலும் அடிக்கடி படிக்கும் வார்த்தை முக்தி. இதன் அருஞ்சொல் பொருள் விளக்கம் “பிறவா நிலை” . அப்போது எனக்கு தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை “முக்தி” தான். எதுக்கு முக்தி அடையணும், நிறைய பிறவி எடுத்தால் தானே இன்னும் நிறைய சந்தோசத்தை அனுபவிக்க முடியும். இந்த பூமிக்கு என்ன குறைச்சல் ? சந்தோசத்திற்கு என்ன குறைச்சல் ? நல்லா வாழ்ந்துட்டு போகலாமே.. பிறக்காமல் இருந்து என்ன சாதிக்க போறோம் என்று நினைப்பேன்.

ஆனால் இன்று எனது எண்ணம் வேறாக இருக்கிறது. நல்லதை பேசு, நல்லதை பண்ணு, நேர்மையா இரு, உண்மையா இரு, கோபம் கொள்ளாதே, நல்லவனா வாழு என்று ஏகப்பட்ட நன்னெறிகளை மண்டைக்குள் திணித்து இருபத்து ஐந்து வயதுகளில் நிஜ உலகத்திற்குள் அனுப்புகிறார்கள். இங்கே வந்து பார்த்தால் யாரும் உண்மையாக இல்லை, எதிலும் உண்மை இல்லை, தலை முதல் வால் வரை பொய்களால், போலித்தனத்தால் கட்டமைக்கப்பட்ட உலகம், எங்கே குற்றம் என்று நதி மூலம் தேடினால் வாழ்கையே போலி அல்லது பொய் தான்.

உண்மை என்பது நிரந்தரம் என்றால் இங்கே உண்மையே இல்லை. போலித்தனமான இந்த வாழ்க்கை வாழ்வதில் என்ன அர்த்தம் உள்ளது? . இவ்வாறு இருக்க பிறப்பு ஒன்று அவசியம் தானா.. மறுபடியும் இந்த பூமியில் பிறக்கத்தான் வேண்டுமா என்று கேள்வி எழுகையில் , சிறுவயதில் படித்த முக்தி என்ற பிறவா நிலை ஞாபகம் வருகிறது. அதனால் படைத்தவனிடம் ஒரு கேள்வி எழுப்புகிறேன். நான் கடுந்தவம் செய்தோ, தினமும் உன்னை பாடியோ, துதித்தோ, கோவில் கோவிலாக சென்று உன்னை வேண்டியோ என்னால் உன்னிடம் “பிறவா நிலை” கேட்கமுடியாது. என்னை கேட்காமல் என்னை படைத்து அனுப்பிய உன்னிடம் “பொய்யான இந்த பூமியில் இனியும் பிறக்க விரும்பவில்லை” இதை இந்த பிறவிக்கு அடுத்து செய்ய முடியுமா முடியாதா ? இது தான் என் கேள்வி.

பெண் காவலர்கள் கூட செய்ய தயங்கும் கொடுமை

பதிவின் வடிவம்

திவ்யா, B.COM ஒரு பச்சைப் படுகொலை! – இதை படித்த பிறகு எந்த மாதிரியான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் மிகவும் வெட்கமாக வேதனையாக இருக்கிறது. ஊழல் அரசியல் வாதிகளை விட, தாம் சுரண்டப்படுகிறோம் என்று அறியாமல் ஓட்டுக்கு காசுவாங்கும் அப்பாவி மக்களைவிட , படித்த பெண்கள், முதல் தலைமுறையாக கல்விகற்க வரும் பெண்களிடத்தில் காட்டும் மேதாவிதனமான வன்முறை மிக மிக கொடுமையானது

பெண் காவலர்கள் கூட செய்ய தயங்கும் கொடுமையை கல்லூரி பெண் பேராசிரியர்கள் செய்திருப்பது பெண் ஆசிரியர் அனைவருக்குமே பெருத்த அவமானம், அசிங்கம். ஏழைகள் என்றால் கிள்ளுகீரையா அவர்களுக்கு?

வக்கிரம், குரூரம்..

எத்தனை கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் இருக்கின்றன? எவை ஒன்றாவது இவர்களை கண்டிக்குமா? இவர்களை எதிர்த்து குரல் கொடுக்குமா?
படித்த நடுத்தர மேல்தட்டு பெண்களுக்கு தானே பெண் உரிமை சங்கங்கள், கழகங்கள் எல்லாம் குரல் கொடுக்கும் ?
ஏழை பெண்ணுக்கு யார் கொடுப்பார்?

ஏழை பெண்கள் என்றால் எல்லோருக்கும் இளக்காரம் தான். அவ்வாறு ஏளனம் செய்வோரை ஏழை பெண்கள் செருப்பால் அடித்திருக்க வேண்டும். ஏழை பெண்களே கோழைகள் ஆகாதீர்கள் கோபப்பட கற்றுகொள்ளுங்கள். இந்த சமுதாயம் திருந்தும் வரை கோபம் தான் உங்கள் கேடயமாக இருக்க வேண்டும்.

நீங்கள் மனிதர்களே இல்லை

பதிவின் வடிவம்

கோபம் கொள்ளாதே என்று தான் ஆன்மிகமும் பழைய அறநெறிகளும் சொல்கின்றன ஒழிய சினம் கொள் என்று சொன்னவர் பாரதியை தவிர்த்து வேறில்லை. வள்ளுவர் கூட தேவையான இடத்தில் பொய் சொன்னாலும் மெய் தான் என்று சொல்கிறார். அதே போல கோபமும் தேவைதான் என்று சொல்லவில்லை.

நம் மக்களின் இன்றைய பிரச்சனை அநீதிக்கு எதிராக கோபம் கொள்ளாமலே இருப்பது , செத்தாலும் சாவோம் ஆனால் கோபம் கொண்டு போராட மாட்டோம் என்கிற அளவிற்கு இருப்பது. ஊழலுடன், லஞ்சத்துடன், சமுக அவலத்துடன், அரசின் அலட்சியத்துடன் அன்றாடம் வாழப் பழகி கொண்டிருக்கிறோம். இதை விட பெரும் அவலம் வேறு என்ன இருக்க முடியும் ?

நான் சொல்லவருவதன் அர்த்தம் கண்ணுக்கு கண் என்ற பழி வாங்குவதோ , வன்முறையால் போராடுவதோ இல்லை. எதிர்த்து குரல் எழுப்புவது, நீ செய்வது எனக்கு பிடிக்கவில்லை என்று மறுப்பது, ஒரு நாள் அல்லது குறைந்தது ஒரு மணி நேரம் போராட எத்தனிப்பது . நமக்காக எதிர்க்கட்சி போராடும், கம்யுனிஸ்ட் போராடுவான் என்று கன்னத்தில் கைவைத்து காத்திருப்பது அல்ல. அவர்களெல்லாம் மக்களை கைவிட்டு காலம் பல ஆகிவிட்டது. இன்றைய எதிர்கட்சிகளுக்கு ஆளுங்கட்சிகளை குறைசொல்ல எந்த தகுதியும் இல்லை. அதானாலேயே ஆளுங்கட்சிகளுக்கு குளிர்விட்டு போனது.

அந்த நல சங்கம், இந்த நல சங்கம், ஏரியா மக்கள் நல சங்கம், சாதி சங்கம், மத சங்கம் என்று ஆயிரம் சங்கம் இருக்கிறது.. தேசத்திற்கு பாதுகாக்க ஒரு நல சங்கம் உண்டா என்று தெரியவில்லை. அல்லது தெரியாத அளவிற்கு அவர்களின் செயல்முறைகள் உள்ளது. இந்த நாட்டில் விலைபோகாத தலைவன் என்று ஒருத்தன் கூட இல்லை என்று அடித்து சொல்லலாம்.

அதனால் சொல்கிறேன் கோபப் படுங்கள். அது தான் உங்களை காக்கும் கேடயம். தட்டி கேளுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும். என் வரையில் நியாயத்திற்காக நான் எழுப்பிய குரல் இதுவரை வீணாக வில்லை. பத்துபைசா உங்களுக்கு இழப்பு என்றாலும் கேளுங்கள். பார்வை குறைபாடு உள்ள ஒரு பிச்சை காரருக்கு ஐம்பது ரூபாய் கூட போடுவேன். ஆனால் ஐம்பது பைசா குறைவாக கொடுக்கும் பஸ் கண்டக்டருடன் சண்டைக்கு போவேன். அதே போல உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சேவையில் குறை இருந்தாலும் சண்டை போடுங்கள். பஸ் நிலையத்தில் எந்த பொருளுக்கும் நிர்ணயித்த விலையை விட அதிகமாகவே வசூலிப்பார்கள். இரண்டு முறை சண்டை போட்டேன். நியாயம் கிடைக்க வில்லை. இப்போது என் எதிர்ப்பை மாற்றிக்கொண்டேன். அங்கு எதுவும் வாங்குவதில்லை. இது போல ஒவ்வொருவரும் அங்கு வாங்குவதை நிறுத்தினால் தானாக வழிக்கு வருவார்கள். இதே போலவே தமிழ் நாட்டில் உள்ள எல்லா மதுபான கடைகளிலும் ஏன் எதற்கு என்று கேள்வி இல்லாமல் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் வாங்குகிறார்கள். அண்டை மாநிலமான கேரளாவில் பைசா சுத்தமாக தருவதோடு பில்லும் கொடுத்துவிடுகிறார்கள். குடி மகன்களும் வரிசையில் நின்று வாங்கி செல்கிறார்கள்.

பொண்டாட்டி, பிள்ளைகள், ஏப்பை சாப்பை நண்பர்கள், உங்களுக்கு கீழ் வேலைபார்க்கும் சக மனிதர்கள் இவர்களிடம் உங்கள் கோபத்தை காண்பிக்க தவறுவதில்லை. எங்கு காட்டக்கூடாதோ அங்கு கோபத்தை காட்டுவது, எங்கு கோபத்தை காட்டவேண்டுமோ அங்கு காட்டாதிருப்பது இரண்டுமே மடத்தனத்தின் உச்சம் தான். இப்படிதான் எப்போதும் இருப்பீர்கள் என்றால் நீங்கள் மனிதர்களே இல்லை.
சொல்லுனும்னு தோணியது சொல்லிட்டேன். இனி உங்கள் பாடு.

கொடிது கொடிது புதுகவிதை படிப்பது

பதிவின் வடிவம்

எனக்கு இன்றைய புதுக்கவிதைகளை பிடிப்பதே இல்லை. கவிதை என்று இணையத்தில், புத்தகத்தில் எங்கேனும் பார்த்தால் , தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட வைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நானும் கவிதைகள் எழுதியவன், விரும்பி படித்தவன் தான் . அந்த கவிதைகள் எல்லாம் ஒரு சந்தம் , ஒரு எதுகை, மோனை எல்லாம் சேர்த்து கூடவே நச்சுனு ஒரு மேட்டர சொல்லி முடிப்பதுண்டு. மரபுகவிதைகளின் எளிய வடிவம் தான் புது கவிதை. படிப்பவர் எல்லோருக்கும் புரியும் வகையிலும், அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், செய்திகள், அழகியல், அரசியல், அனுபவங்கள், துயரங்கள், கோபம் இவற்றுடன் படிப்பவனுக்கு மனதில் ஒட்டக்கூடிய அளவிலான ஒப்புவமை மற்றும் தேர்ந்த வார்த்தைகளை கொண்டு நேரடியாக பேசும்போது படிப்பவனுக்கு கவிதை மேல் ஒரு பிரியம் வரும். படித்த பின்பும் அந்த கவிதையின் மொழி அதன் சந்ததினால் மனதில் தங்கும்.

இப்பவும் எழுதுறாங்களே கவிதை என்ற பெயரில் வாசகனை தலை சுற்றவிட்டு “என்னதான்யா சொல்ல வர்றான்” என்று மண்டையை பிராண்டுறாங்க . இல்லையென்றால் சாதாரண சம்பவத்தை சம்பந்தமில்லாத ஒரு தலைப்பிட்டு, என்ன சொல்ல வர்றார் என்றோ , இந்த தலைப்புக்கும் இதுக்கும் என்னையா சம்பந்தம் என்றோ குழப்புகிறார்கள். ஒரு பத்து தடவ என்ட்டர் தட்டி கவிதைன்னு சொல்றாங்கப்பா..

உதாரணத்திற்கு நமது சக பதிவர் நர்சிம் எழுதி விகடனில் வெளிவந்திருக்கும் கவிதை

தற்கொலை

வேகமாய் வரும் வாகனம்
சாலை தேங்கிய
மழை நீரை
சட்டையில் இறைக்கக்கூடுமென
அவசரப்பட்டு ஒதுங்குகையில்
பின்னிருக்கும் சகதியில்
கால் பதிந்து சேறானது
காலணிகள்.-
வந்த வாகனம்
நொடிப்பொழுதில்
இடப்புறமாக திரும்பிப்
போய்விட்டது
அருகில் வராமலே

நன்றி : நர்சிம்

இந்த கவிதைக்கும் தற்கொலைக்கும் என்ன சம்பந்தம் ? காலணிகள் சேரில் இறங்கியது தற்கொலையா..? அதை accident என்று கூட சொல்லலாம். தவறாக கணித்து சேற்றில் இறங்கியது எப்படி தற்கொலையாகும். சரி இதனால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு கவிஞர் சொல்லவருவது ?

இதுக்கு ஒரு சினிமாவில் பார்த்திபன் நகைச்சுவையாக சொல்லும் கவிதை எவ்வளவோ தேவலை.

ஒரு ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட் சாபிடுகிறதே !

இவர்கள் சிந்தனையில் சில சின்ன கருத்துகள் அல்லது சிந்தனைகள் சுவையாக இருக்கும் பட்சத்தில் அதை ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாம். அதை விடுத்து நானும் கவிதை சொல்கிறேன் என்று களத்தில் இறங்கி, நீண்ட வாக்கியத்தில் எழுதி அதை இரண்டு வார்த்தைக்கு ஒரு முறை என்ட்டர் தட்டி , இதோ கவிதை என்று சொல்வது காலக்கொடுமை. இதற்கு 32 பேர் பின்னூட்டம் இடுவது அதனினும் கொடுமை. இதை அவ்வையார் பாணியில் சொன்னால்

கொடிது கொடிது புதுகவிதை
படிப்பது கொடிது
அதனினும் கொடிது அதற்கு வந்த
பின்னூட்டத்தை படிப்பது.

புதுக்கவிதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு, நீங்கள் எழுதி தொலைப்பதை அறிந்து அறியாமலும் படிக்கும் வாசகனாக கெஞ்சிகேட்கிறேன். மரபுக்கவிதைகளின் கடினத்தன்மை உடைத்து எளியோருக்கு புரியும் வண்ணம் எழுதிய பாரதி, பாரதி தாசன், சுரதா, பட்டுகோட்டை, கண்ணதாசன் இன்னும் எத்தனையோ நல்ல கவிஞர்களின் ஆத்மாக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். அவர்களை கொஞ்சமேனும் கற்று கவிதை செய்யுங்கள்.
இல்லையென்றால் twitter இல் ஒரு கணக்கை தொடங்கி உங்கள் சிந்தனைகளை சொல்லுங்கள். அதை விடுத்து என்ட்டர் தட்டி பார் என்கவிதையை என்று முழங்காதீர்கள்.

இவர்களுக்கு வாரமலரில் வரும் அமெச்சூர் கவிதைகள் எவ்வளவோ தேவலை.

கவிஞர்(!) நரசிம் , சங்கப்பாடல்களுக்கெல்லாம் அருமையான விளக்கம் கொடுத்து என்னை அவரது நிரந்தர வாசகனாக்கியவர். அவருக்கு நான் எப்படி கவிதை எழுதவேண்டும் என்று சொல்ல முயலவில்லை. எனது பல நாள் ஆதங்கம் தான் இது. பலப்பல புது கவிதை மன்னர்கள் என்னை கொல்லாமல் கொண்டதன் விளைவு இது. சமிபத்திய உதாரணம் தான் மேற்சொன்ன கவிதை.

இதையெல்லாம் மிஞ்சி பலப்பல பெரும் கொடுமையான ( குழப்பமான ) கவிஞர்கள் நாட்டில் உண்டு. எல்லாம் கவிதையின் பெயரில் ஒரு மயக்கத்தை கொண்டுவந்த பாரதியை சொல்லணும்.